Friday, June 12, 2020

Friday, March 3, 2017

தருமபுரி விவசாயி தற்கொலை: அன்புமணி இராமதாஸ் இரங்கல்

தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி, வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்கிக் கொள்ள முடியாமலும், கடன் சுமையை தாங்க முடியாமலும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் பங்கேற்ற போது தான், முனிராஜின் இறப்பு செய்தி கிடைத்தது. ஒன்றரை ஏக்கரில் கடன் வாங்கி தக்காளி, கால்நடைப்புல் உள்ளிட்ட பயிர்களை முனிராஜ் பயிரிட்டிருந்தார். வறட்சியால் பயிர்கள் கருகியதாலும், கடன் பெற்று வாங்கியிருந்த கால்நடைகள் பால் தராததாலும் முனிராஜுக்கு ரூ.3.00 லட்சம் அளவுக்கு கடன்சுமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனை சமாளிப்பதற்கு வழி தெரியாத முனிராஜ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடுமையான வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் இன்னும் குறையவில்லை என்பதையே இந்த சோக நிகழ்வு காட்டுகிறது.
முனிராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முனிராஜின் தற்கொலையை தனித்த நிகழ்வாக பார்க்காமல் தமிழகத்தில் நடந்து வரும் உழவர்கள் தற்கொலைகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். இனியும் இத்தகைய தற்கொலைகள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து உழவர் முனிராஜின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

டாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசு பதில் மனு

*பள்ளி  மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 325 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல்.*
*பள்ளி, கல்லூரி & கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி நாராயணன் தாக்கல் செய்த வழக்கில் டாஸ்மாக் பதில் மனு.*
*பிப்.24 ஆம் தேதி மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 325 கடைகள் அடங்கும் என உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் மனு.*

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் தருவதில் தெளிவான கொள்கை தேவை!


திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் செயல்பட்டு வரும் பெப்சி, கோக் நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்பு ஆலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீதிபதிகள் ரத்து செய்திருக்கின்றனர்.
கங்கை கொண்டானில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கோகோ-கோலா நிறுவனத்தின் துணை அமைப்பான சவுத் இண்டியன் பாட்டிலிங் கம்பெனியும், பெப்சி நிறுவனத்தின் சார்பில் பிரதிஷ்டா நிறுவனமும் குடிநீர் தயாரித்து புட்டியில் அடைத்து அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் பெப்சி நிறுவனம் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரையும், கோக் நிறுவனம் 9 லட்சம் லிட்டர் தண்ணீரையும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து பலரும் தொடர்ந்த பொதுநல வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், இரு நிறுவனங்களும் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க இடைக்காலத் தடை விதித்தது. அவ்வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பளித்த நீதிபதிகள், இடைக்காலத் தடையை நீக்கியதுடன், தொடர்ந்து தண்ணீர் எடுக்க அனுமதியளித்தும் ஆணையிட்டனர்.
பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணி நீரை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காரணம் அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டது தான். வழக்கு விசாரணையின் போது, முழுக்க முழுக்க பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு சாதகமாகத் தான் தமிழக அரசு நடந்து கொண்டது. அந்த நிறுவனங்களின் வழக்குறைஞர்கள் எப்படி வாதாடினார்களோ, அதே கோணத்தில் தான் தமிழக அரசு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அதையேற்று தான், பெப்சி, கோக்  நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அந்த வகையில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அதேநேரத்தில், இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய சில வினாக்கள் தான்  மிகவும் கவலையளிக்கின்றன. ‘‘ஆற்று நீரையும், நிலத்தடி நீரையும் பயன்படுத்தும் மற்ற ஆலைகளை எதிர்த்து வழக்குத் தொடராமல் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன்?’’ என்பது தான் நீதிபதிகள் எழுப்பிய வினா ஆகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலோ, சரியான புரிதல் இல்லாமலேயோ அப்படி ஒரு வினாவை நீதிபதிகள் எழுப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி நீதிபதிகளுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்புக்கும் விளக்கமளிக்க வேண்டியதும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகும். அனைத்துத் தொழிற்சாலைகளும் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன என்றாலும், அவை அனைத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது. அவை எடுக்கும் தண்ணீரின் அளவு, தொழிற்சாலைகளின் பயன்பாடு, அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தான் அவற்றை வகைப்படுத்த முடியும்.
உதாரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயப்பட்டறை,  குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களையும், உற்பத்தித் துறை நிறுவனங்களையும் ஒன்றாக பார்க்க முடியாது. கேரள மாநிலம் பிளாச்சிமடாவில் அமைக்கப்பட்டிருந்த கோகோ- கோலா நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் இப்படி ஒரு வினாவை எழுப்பவில்லை. மாறாக,‘‘நிலத்தடி நீர் என்பது அரசின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டுள்ள பொதுச்சொத்து ஆகும். மக்களுக்கு துரோகம் செய்யும் வகையில், அந்த வளத்தை தனியார் சுரண்டுவதை அனுமதிக்கும் உரிமை அரசுக்கு இல்லை’’என்று கூறியதுடன், தண்ணீருக்கு மாற்று ஆதாரங்களை ஏற்படுத்திக் கொண்டால் மட்டும் தான் கோகோ-கோலா ஆலையை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஆணையிட்டார். இவ்வழக்கிலும் அதுபோன்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அது தான் இயற்கை நீதியாக இருந்திருக்கும்.
அதேபோல், இந்த வழக்கிலும் தமிழக அரசு பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்திருக்கக் கூடாது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோகோ-கோலா ஆலை அமைக்கப்படுவதற்கும், அந்த ஆலை ஆற்று நீரை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய போது, அதை மதித்து அந்த ஆலையை மூட ஆணையிட்ட தமிழக அரசு, இந்த விஷயத்தில் மட்டும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவும் சூழலில் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்ப்பது ஏற்க முடியாததாகும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஆலைகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட சுற்றுச்சுழலை பாதிக்கக்கூடிய ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இதுகுறித்து தெளிவான கொள்கைகளை வரையறுத்து அதனடிப்படையில் மட்டுமே தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

Wednesday, December 16, 2015

என் முதல் காதல்

என் முதல் காதல் அவளோடு
சில நேரங்களில் பகலிலும்,
பல நேரங்களில் இரவு மின்னல்
ஒளியிலும் அவள் முகம்
பார்த்திருக்கிறேன்

என் மேல் விழுந்து
மெய்சிலிர்க்க வைத்து
என் உதடு வழி தாகம்
தீர்ப்பவள்
விவரம் தெரியும் முன்பிலிருந்தே
அவளை எனக்கு தெரியும்
பார்க்கும்போது மட்டும் பரவசம் அடைவேன்
கைப்பேசி காதலுக்கு அவள்
ஊரில் வசதியில்லை
நாங்கள் பேசிக் கொள்வது
வருடத்துக்கு சில நாள்கள்
மட்டும்தான்
அவள் வரும்போது முத்தமிட்டும்
காகித கப்பல் விட்டும்
விளையாடுவது உண்டு
அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.
அவள் என்னை விட்டு
பிரியும்போது எனக்கு
உடல் நலம் சரியில்லாமல் போகிறது
அவள் வருவதைப் பார்த்தால்
எங்கள் வீட்டில் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.
அவளைப் பற்றி கவிதை எழுத
நினைப்பதுண்டு
அவளே கவிதை
அவளைப் பற்றி என்ன
எழுதுவது....
எப்போது திருமணம்?
பொறுங்கள், குழந்தைகளைக் கேட்டு சொல்கிறேன்.
குழந்தைகளா?
இப்பொழுது அவர்கள் தான்
அவளைக் காதலிக்கிறார்கள்.
குழந்தைகள் காதலிக்கிறார்களா...
ஆமாம் மழையை காதலிக்காத
மழலை யாராவது உண்டா?
இப்போது அவர்களுக்கும்
புரிகிறது அவள் மென்மையானவள்
அல்ல கோபப்பட்டால் கொலையும்
செய்வாள் என்று....